நம் வாழ்வில் எப்படி ஒவ்வொரு படி ஏறி மேலே செல்கின்றமோ அப்படித்தான் நான் சோளிங்கர் யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்தேன். தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு நாம் செல்லும் போது பல கேள்விகள் நம்முடைய மனதில் எழுகின்றன. இந்த கோயில் எந்த காலத்தில் கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது. இவை எனக்கும் பொருந்தும். இப்படி பல கேள்விகள் என்னுள் இருக்கும் நிலையில் பெரிய மலையில் அமர்ந்திருக்கும் யோக நரசிம்மரை தரிசிக்க அரம்பமானேன்.
யோக நரசிம்மர் ( பெரிய மலை )
முதல் 100 படிகளை கடந்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி சோளிங்கர் மலைக்கும் குரங்குகளுக்கும் என்ன தொடர்பு என்பது மட்டுமே. அதன் ஆரவாரமும், அமர்க்களமும் நம்மை எழுச்சி அடைய செய்கின்றன. அவைகள் நரசிம்மரையும் ஆஞ்சநேயரையும் தொடர்புடையவை என்பதை அறிந்தேன். இவைகள் மூலமாக நாம் வந்தோம் என்ற உண்மையோடு, 500 படிக்கட்டுகள் நகர அடுத்த கேள்வியாக இக்கோயில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது என்பது தான், அங்கேயே நான் தெரிந்து கொண்ட உண்மை அது விஐய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது என்பது, அரசர்கள் காலம் பொற்காலம் அங்கே கோயில்கள் வளர்ந்தன. இப்படி அரசர்களின் சிந்தனை என்னுள் எழுந்து, கோயிலின் பரிமாற்றங்கள் என்னுள் மேலோங்கி 1305 படிக்கட்டுகள் கடந்தேன், நான் 750 அடி மலைக்கு மேல் நிற்பதை உணர்ந்தேன். ஏக சிலா பர்வதம் அதாவது ஒரே கல்லால் ஆன மலை என்பதை புரிந்து கொண்டேன். திருக்கடிகை என்ற இதன் பழைய பெயர், கடிகை என்பது 24 நிமிடம், 24 நிமிடங்களில் நரசிம்மர் தோன்றி பிரகலாதனுக்கு காட்சி தந்த காரணத்தால் நானும் அதே நிமிடங்கள் மலையில் தரிசனம் செய்தேன். சப்தரிஷிகளும் இங்கே தரிசனம் செய்துள்ளனர். லஷ்மி நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயார் அருளையும் பெற்றேன். 17 ஆம் நூற்றாண்டின் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தேன், பெரிய மலை அடிவாரத்தில் உள்ள பிரகலாதன், வீர ஆஞ்சநேயர் சன்னதிகளை தரிசனம் செய்து சிறிய மலையின் அடிவாரத்தை நோக்கினேன்.
யோக ஆஞ்சநேயர் ( சிறிய மலை )
14 ஆம் நூற்றாண்டின் படிக்கட்டுகள் என்னை ஆஞ்சநேயரை பார்கக வழி வகுத்தது. ஆழ்வார்கள் தரிசனம் செய்த திருகடிகையைய் நானும் இன்று தரிசனம் செய்ய போகிறேன் என்று மனம் மகிழ்ந்தேன். 406 படிக்கட்டுகள் கடந்து சக்கரத்துடன் இருக்கும் ஆஞ்சநேயரின் அருள் பெற்று 350 அடி மலையில் அமர்ந்து பல விஷயங்களை நினைத்து பார்த்தேன். கடிகாசலம், திருக்கடிகை பாசுரங்களின் பெயராக இருந்தது. சோழசிம்மப்புரம் சோளிங்கராக மாறியது. பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பதிகம் பாடிய ஸ்தலமமாக அமைகிறது, விசுவாமித்திரர் நரசிம்மரை தரிசித்து பிரம்ம மகரிஷி பட்டத்தை பெற்றது இங்கேயே. இன்னும் எத்தனையோ என் நினைவுகளில் அந்த சோளிங்கர் நரசிம்மரும் ஆஞ்சநேயரும்.
கோயில் நேரம்
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
கோயிலின் சிறப்பு
108 திவ்ய தேசங்களில் 65வது ஆகும்.
சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்கு செல்லும் வழி
விமானம்
சென்னை விமான நிலையம் சுமார் 102 km தொலைவில் அமைந்துள்ளது.
ரயில்
அரக்கோணம் மற்றும் திருத்தணி ரயில் நிலையம் வெவ்வேறு திசையில் சுமார் 30km தொலைவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் - பெங்களூர் செல்லும் லால் பாக் விரைவு ரயில் சோளிங்கர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பேருந்து
சோளிங்கர் கோயிலுக்கு வேலூர், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்திலிருத்து பேருந்து வசதிகள் உண்டு.
சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் அமைவிடம்