அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளான செய்தி இன்னும் நம் மனதிலிருந்து நீங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கான பதில் விமான விபத்து புலனாய்வு அதாவது AAIB-யின் முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
போயிங் 787-8 ஏர் இந்திய விமானம் ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதியம் 1.37 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நொடிகளிலேயே AI171-இருந்து MAYDAY MAYDAY MAYDAY என்று வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு (ATC) செய்தி வந்தது, பின்னர் விமானத்திலிருந்து எந்த பதிலும் வராத நிலையில் பிஜே மருத்துவக் கல்லூரி அருகே விமானம் வெடித்துச் சிதறிய நிலையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது, அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வாஷ்குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைத்தார். இந்த கோர விபத்தானது பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்ததால் அங்கிருந்தவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த விமான விபத்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் முப்பது நாட்களுக்குள் முதல் கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் விசாரனையய் தொடங்கினர்.
விமான விபத்து புலனாய்வு அறிக்கையின்படி மதியம் 1.38 மணிக்கு விமானம் 180 நாட்ஸ் வேகத்தை எட்டிய பிறகு இரண்டு எஞ்சின்களுக்கான எரிப்பொருள் செலுத்தும் சுவிட்ச் ஆனது ஆஃப் செய்யப்பட்டுள்ளது, அதாவது இது RUN to CUTOFF ஆக மாறியுள்ளது, இதைக் கவனித்த ஓரு விமானி மற்றொரு விமானியிடம் இதை ஏன் ஆஃப் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஆஃப் செய்யவில்லை என்று அந்த விமானி கூறியிருப்பதும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் பதிவாகியுள்ளது. மீண்டும் விமானிகள் அடுத்த அடுத்த நொடிகளில் இரண்டு எஞ்சின்களின் சுவிட்ச்களையும் ஆன் செய்தனர் அதாவது CUTOFF to RUN ஆக மாற்றினர், முதல் எஞ்சின் மீண்டும் செயல்படத் தொடங்கியது ஆனால் இரண்டாம் எஞ்சின் முழுவதுமாக செயல்படவில்லை என்றே கூறப்பட்டுள்ளது, நொடிகள் கடந்த நிலையில் எனிஜின்களுக்கு செல்லும் எரிபொருள் தடைப்பட்டதால் விமானம் முழுவதுமாக டேக் ஆஃப் ஆகாமல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பறவைகள் மற்றும் வானிலை காரணங்களால் விமானம் விபத்துக்குள்ளான சான்று எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி விமானம் டேக் ஆஃப் ஆன போது இருந்த எடையானது அனுமதிக்கப்பட்டதை விடக் குறைவு என்றும் ஆபத்தான பொருட்கள் எதுவும் விமானத்தில் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விமானிகள் விபத்து நடந்த முன்தினம் போதுமான நேரம் ஓய்வு எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏன் இந்த சுவிட்ச்சானது RUN to CUTOFF ஆக மாறியது என்பதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இந்த முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை., இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும் போதே முழு விபத்துக்குள்ளான காரணம் தெரிய வரும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் விபத்தே இன்னும் மறக்கப்படாத நிலையில் மீண்டும் இப்படி ஒரு மற்றொரு விபத்து நம் கண்களிலிருந்து மீளப்படாதவை.