சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு போட் மெயில் எக்ஸ்பிரஸ் என்னை அழைத்துச் சென்றது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். பாம்பன் பாலத்தைத் கடக்கும்போது இந்த மாதிரி அழகு உலகில் வேறெதுவும் இல்லை என்று உணர்ந்தேன். பாம்பன் பாலத்தில் ரயில் மிகவும் மெதுவாகச் சென்றது. வங்காள விரிகுடாவின் காற்றும் இந்தியப் பெருங்கடலின் சுவாசமும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இது தென்னிந்தியாவின் மிக அழகான இடம் என்று எனக்குள் நினைத்தேன், மேலும் உலகின் மிக ஆபத்தான ரயில் பாலம் என்றும் உணர்ந்தேன். பாலம் தூண்களின் ஆதரவுடன் மட்டுமல்லாமல், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலின் கடவுளான ராமரின் ஆசீர்வாதத்துடன் நிற்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை அடைந்தேன். ராமாயணத்துடன் தொடர்புடைய கோயிலைப் பார்க்க நான் ஆர்வமாக இருந்த நேரம் அது. சீதையின் கைகளால் கட்டப்பட்ட கோயிலைப் பார்க்க ஆரம்பமானேன். மேலே உள்ள ராமநாதசுவாமி ராஜ கோபுரம் என்னை வரவேற்றது.

கோயிலின் வரலாறு

இந்திய இதிகாசமான ராமாயணத்துடன் இக்கோயில் தொடர்புள்ளதால் அங்குச் சென்றபிறகு ராமாயணத்துடன் என்னைத் தொடர்புப்படுத்தி கொண்டேன். அப்போது ராமேஸ்வரம் என்ற பெயர் ராமனிடமிருந்து வந்தது என்று தெரிந்து கொண்டேன். ராமநாதசாமி கோயிலின் வரலாறு அதன் பின்னணியில் உள்ளது என்பது தெரிந்தது. ராவணனைக் கொன்ற பிறகு ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால், மகரிஷியின் ஆலோசனைப்படி ராமர் கோயிலைக் கட்ட விரும்பினார். கைலாசத்திலிருந்து லிங்கத்தைப் பெறுவதற்காக ராமர் அனுமனை அனுப்பினார். குறிப்பிட்ட நேரத்தில் அனுமன் திரும்பி வராததால் சீதை தன் கைகளால் மணலை குவிக்க ஆரம்பித்தாள். அது லிங்கமாக உருவெடுத்து இன்று ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களால் வழிபடப்படுகிறது. ராமநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள காசி விஸ்வநாதரின் தெய்வம் கைலாசத்திலிருந்து அனுமனால் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில், கோயில் ஒரு சிறிய வைக்கோல் கூரையாக இருந்தது, பின்னர் அது 12 ஆம் நூற்றாண்டில் மேம்படுத்தப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கோயில் தூண்கள் 18 ஆம் நூற்றாண்டில் முத்துராமலிங்க சேதுபதியால் கட்டப்பட்டது. ஒவ்வொரு தூணும் 30 அடி உயரம், மற்றும் 1212 தூண்கள் கொண்டு 3850 அடி நீளம் உடையது. இது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி, விஸ்வநாதர், விசாலாக்ஷி, ஆஞ்சநேயர், நடராஜர், ஜோதிர்லிங்கம், பள்ளிகொண்ட பெருமாள், விக்னேஸ்வரர், வஜ்ரேஸ்வரர், மகாலட்சுமி மற்றும் 63 நாயனார்கள் என ஏராளமான தெய்வங்கள் உள்ளன. ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தங்கள் உள்ளன, அவற்றில் 22 
தீர்த்தங்கள் கோயிலுக்குள் உள்ளன. கோயிலின் ஒவ்வொரு தீர்த்தமும் பக்தர்களுக்கு ஒவ்வொரு பலனைத் தருகின்றது. மகாலக்ஷமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், கவச்ச தீர்த்தம், கவய தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கரை தீர்த்தம், சக்கரைர்த தீர்த்தம், சொக்கரஹத்தி தீர்த்தம், சொரூப தீர்த்தம், 22 கிணற்று தீர்த்தங்கள், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சர்வ தீர்த்தம், கோடி தீர்த்தம் என்பன. இந்தத் தீர்த்தங்களின் பெயர்கள் ராமாயண கதாபாத்திரங்களுடன் தொடர்புடையவை என்பர். ராமநாதசாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் அதில் நானும் ஒருவன் என்பது குறிப்படத்தக்கது.

அக்னி தீர்த்தம்

ராமர் புஷ்பக விமானத்தில் சீதையுடன் வரும்போது, ராவணனிடமிருந்து அவளை மீட்டது பற்றி விளக்கினார். புஷ்பக விமானம் சமுத்திரத்தின் மேலே வந்தபோது, ​​ராமர் சீதையிடம், அனுமன் மற்றும் வானரர்களைக் கொண்டு பாலம் அமைத்ததாகக் கூறினார். அவ்விடம் இன்று ராம சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்தச் சமுத்திரத்தில் புனித நீராடும் பக்தர்களின் பாவம் நீங்கும் என்று ராமர் கூறினார். அதுதான் அக்னி தீர்த்தம்! இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தை அம்மாவாசை, ஆடி அம்மாவாசை மற்றும் பிற நல்ல நாட்களில் புனித நீராடுகின்றனர். நான் அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு மேலே பார்த்தபோது ராமனும் சீதையும் இப்படித்தான் கடந்து வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். இந்தியாவின் சார்தாம் இடங்களில் உள்ள ஒரே சிவன் கோயில் ராமேஸ்வரம். ராமேஸ்வரம் இந்தியாவின் ஜோதிர்லிங்க கோயில்களில் உள்ளது. இந்தியாவின் மற்ற இடங்களில் பார்க்க முடியாத சிறப்பு வாய்ந்த இடம் இது. முருகன் மெஸ்ஸின் மதிய உணவு இன்னும் என் நாவில் இருக்கிறது.கோயிலின் தீர்த்தங்கள் இன்னும் என் உடம்பில் உள்ளது. இன்னும் என் இதயத்தில் பாம்பன் பாலம் நினைவுகள். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் உள்ள ராமர் இன்னும் என் கண்களில் இருக்கிறார்.

ராமநாதசுவாமி கோயில் நேரம் 
காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம் 
ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் 180 கிமீ தொலைவில் உள்ள மதுரை விமான நிலையம் ஆகும்.

ரயில் 
ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ஆகும், இது 2 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு Boat Mail மற்றும் சேது விரைவு ரயில்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஏராளமான ரயில்கள் உள்ளன. பிஎஸ்பிஎஸ் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை இயங்கும். AYC RMM எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை இயங்கும். RMM HUMSAFAR சனிக்கிழமை இயங்கும். கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வரை ரயில் இயக்கப்படுகிறது. திருப்பதி எக்ஸ்பிரஸ் திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

பேருந்து மற்றும் சாலை வழியாக
ராமநாதசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் ஆகும், இது 2 கிமீ தொலைவில் உள்ளது. NH49, NH87 நெடுஞ்சாலைகள் ராமேஸ்வரத்தை இணைக்கின்றன.